தொடர் மழையால் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கும் அசாம்

0 3137

அசாமில் பெய்துவரும் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அசாமின் கசார் மாவட்டத்தில் வீடுகள், சாலைகள், வயல்வெளிகள் என எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

காமரூப் மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. விளைநிலங்கள், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

காம்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் 26 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது. 89 முகாம்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மாநில மீட்புக்குழுவினரும் முழு வீச்சில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவுகளால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா, மீசோரம், மணிப்பூர் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு சாலை- ரயில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்த் அபிஸ்வாவுடன் தொலைபேசி மூலம் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதிளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments