மீன் விற்பனையில் மோதல்; பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டு.!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்ற பிரச்சினையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 5பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த 3 பேர் நேற்று காலை கந்தப்பக்கோட்டையில் மினி வேனில் மீன் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை மீன் விற்பனையில் ஈடுபட்ட 3பேரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் தாக்குதலுக்கு ஆளான 2பேரின் ஊரில் இருந்து சென்றவர்கள் மீன் விற்பனை செய்த மினிவேனின் கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மீன் விற்பனை செய்த இளைஞர்கள் 30-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அராஜகச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாக்கத்தி,வாள், அரிவாள்,உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருத் தெருவாக சுற்றிய அவர்கள் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் சாலையில் நிறுத்தியிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிய அந்த கும்பல் தெருவில் நடந்து சென்ற சுமார் 5க்கும் மேற்பட்டவர்களை அரிவாளால் துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளது.
மேலும் பெட்ரோல் குண்டு வீசி 2 வீடுகளை சேதப்படுத்திய அந்த கும்பல் வீட்டில் இருந்த நபர்கள், கால்நடைகள் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தும் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வன்முறை கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Comments