கல்குவாரியில் பாறைகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது..!
நெல்லை அடுத்த அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 2-வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குவாரி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் சங்கர நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் 6 தொழிலாளர்கள் கற்கள் அள்ளும் பணியில் ஈடுபட்ட போது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. 300 அடி ஆழ பள்ளத்தில் கற்கள் அள்ளும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் தொழிலாளர்களை மீட்க கடற்படையினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் முருகன், விஜய் ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி செல்வக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்கிறது. மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கல்குவாரி உரிமையாளர் சங்கர நாராயணனை போலீசார் கைது செய்தனர். குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments