விபத்து நேர்ந்த கட்டடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் தலா 10 இலட்ச ரூபாய் நிதி..!
டெல்லியில் தீவிபத்து நேர்ந்த கட்டடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் நேற்றுமாலை பற்றிய தீ, விரைவாக மேலுள்ள கட்டடங்களுக்குப் பரவியது. தீப்பிடித்தபோது அங்கு 200 பேர் முதல் 300 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. கண்காணிப்புக் கேமரா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
கட்டடத்தின் ஓர் அரங்கில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றதாகவும், திடீரென மின்சாரம் துண்டித்த பின்னரே கட்டடத்தில் தீப்பற்றியது அவர்களுக்குத் தெரிய வந்ததாகவும், கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பலர் தீயில் சிக்கிக் கொண்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலையில் பற்றிய தீ நள்ளிரவில் முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 27 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், நாற்பதுக்கு மேற்பட்டோர் தீக்காயமடைந்ததாகவும், 29 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில் மேலும் மூன்று உடல் பகுதிகள் கிடைத்ததாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உடல்கள் அனைத்தும் கருகிவிட்டதால் உயிரிழந்தோரை அடையாளம் காண முடியவில்லை என்றும், டிஎன்ஏ மாதிரிகளைப் பரிசோதித்தே அடையாளம் காணமுடியும் என்றும் காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
விபத்து நேர்ந்த கட்டடத்துக்குத் தீத்தடுப்புப் பாதுகாப்புச் சான்றிதழ் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய பிரிவுகளில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் கட்டடத்தில் செயல்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவான கட்டடத்தின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர். விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தீவிபத்து நேர்ந்த கட்டடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா 10 இலட்ச ரூபாயும், தீக்காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
Comments