டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு.!

0 2388

டெல்லியில்  நேற்று மாலை வணிக வளாகத்தில் பிடித்த தீ நள்ளிரவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 40 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் மேற்குப்பகுதியான முண்டக்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் நேற்று மாலை நாலரை மணியளவில் தீப்பிடித்தது.

கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவிய தீ உக்கிரமாக எரிந்ததால் அதனுள்ளே அலுவலகங்களிலும் கடைகளிலும் இருந்த பலர் உயிர்தப்ப போராடினர். சிலர் மாடிகளில் இருந்தும் குதித்து படுகாயம் அடைந்தனர்.

தீ வேகமாகப் பரவியதையடுத்து மூன்று மாடிகளும் கருகி சாம்பலாகின. 30 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி 50க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர்.

தீ அணைக்கப்பட்டதும் அதில் உயிரிழந்த 27 உடல்கள் மீட்கப்பட்டன. 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

கட்டட உரிமையாளர்கள் இரண்டு பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கட்டடத்தில் ஒரேயொரு குறுகிய படிக்கட்டுதான் இருந்தது என்றும் தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்றும் தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள், கட்டடத்திற்கு தீயணைப்புத்துறையின் அனுமதியும் இல்லை என்று தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து டிவிட்டர் பதிவில் வேதனையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments