மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும் மெட்ரோ ரயில் நிறுவனமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் உள்ள ஏழு கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை முடிக்காமல் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குப் பரிசீலிக்கப்பட்ட போதும், பழைமையான கோவில்களைப் பரிசீலிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதால் கோவில் திருவிழாவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயிலுக்காகக் கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்கோடு இந்த மனுக்களையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைத்தனர்.
Comments