புதிய பிரதமராகிறார் ரணில்? ஓரிரு நாளில் பதவியேற்பு

0 4314
இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க வாய்ப்பு..!

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, ஓரிரு நாட்களில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். அத்தோடு, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள ரணில் விக்ரமசிங்கே ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, ஓரிரு நாட்களில் அதாவது இன்று அல்லது நாளைக்குள் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதேச நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்ட நிலையில், அவர் அதிபர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், இலங்கையின் அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்கவுள்ளதாகவும், பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியோர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளன. கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, மக்களின் போராட்டம் போன்ற இக்கட்டான சூழலுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமையும் புதிய அமைச்சரவையில் 15 பேர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும், கடந்த காலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட எவருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படமாட்டாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அதிபர் பதவியில் இருந்து எந்த காரணத்திற்காகவும் விலகப்போவதில்லை என கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments