இலங்கையில் நீடிக்கும் பதற்றம்... ராணுவ ஆட்சி அமலாகிறதா?

0 2928

இலங்கையில் 3ஆவது நாளாக நீடிக்கும் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்திடம் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

மூன்றாவது நாளாக நீடிக்கும் வன்முறையால் அரசு ஆதரவாளர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரின் வீடுகளும், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுச்சொத்துக்கள் பலவும் எரிந்து சேதமடைந்தன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாளை காலை வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரான நிஷ்சங்க சேனாதிபதிக்கு சொந்தமான அவன்கார்ட் நிறுவனம் மீது போராட்டக்காரர்கள் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல் நடத்தினர்.

கல்முனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு, தாளவட்டுவான், நற்பிட்டிமுனை உள்ளிட பகுதிகளில் டயர்கள் உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு எரித்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க கொழும்பு நகர் பகுதியில் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுத தளவாட வானங்களுடன் ராணுவத்தினர் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வன்முறை கட்டுப்படுத்த சில காலத்திற்கு நிர்வாக அதிகாரங்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பதற்றமான சூழல் நிலவுவதால் இலங்கையில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து அமைதியாக அறவழியில் நடந்த மக்கள் போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராஜபக்சேக்கள் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள், மாகாண ஆளுநர், மேயர் உள்ளிட்டோரின் வீடுகளில் பல டன் கணக்கிலான உரங்கள், எரிவாயு சிலிண்டர்கள், டீசல், பருப்பு உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்கள் அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டதும், ஆத்திரமடைந்து குறிப்பிட்ட வீடுகளை தாக்கி அந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments