நடிகை மும்தாஜ் வீட்டில் டார்ச்சர் மீட்கப்பட்ட சிறுமிகள்..! போலீஸ் தீவிர விசாரணை
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இரு சிறுமிகளை வீட்டு வேலைக்கு அமர்த்தி துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், நடிகை மும்தாஜிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த "மோனிஷா என் மோனலிசா" படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். குஷி, சாக்லேட், மிடில் கிளாஸ் மாதவன், மலபார் போலீஸ் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சமீபத்தில் கலந்து கொண்ட நடிகை மும்தாஜ், சென்னை அண்ணாநகரில் ஹெச் பிளாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரர் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வருவதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட 19 வயதான இளம்பெண் ஒருவர், மும்தாஜ் வீட்டில் தான் துன்புறுத்தப்படுவதாகவும் தனது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்குமாறும் உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து அண்ணாநகர் போலீசார் மும்தாஜ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். புகார் அளித்த அந்த இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த மற்றொரு வீட்டில் வேலை கேட்டதும், அது தெரிந்து மும்தாஜ் வீட்டில் இருந்தவர்கள் அந்த பெண்ணை தேடிச் சென்று விரட்ட ஆரம்பித்ததால் பயந்து போன அவர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசாரிடம் கேட்டபோது இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்ததாகவும், அந்தப் பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், அவரும், 17 வயதான இளைய சகோதரியும் மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். புகார் அளித்த இந்த பெண் கடந்த 6 ஆண்டுகளாக மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பதாக கூறி உள்ளார்.
சிறுமிகளின் தாயாரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ஆறு வருடங்களுக்கு முன்பு இருவரையும் மும்தாஜ் வீட்டில் வேலைக்காக கொண்டு கொண்டு சேர்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். துன்புறுத்துவதாக அளித்த புகாரின் அடிப்படையில் வீட்டு பணிப் பெண்களாக இருந்த இளம்பெண்ணையும், சிறுமியையும் மீட்டு அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தைநல குழுவுக்கும் தகவல் தெரிவித்து உள்ளதால் அவர்கள் விசாரித்து புகார் கொடுத்தால், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அண்ணாநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்களாக இருந்த சிறுமியும் அவரது சகோதரியும் துன்புறுத்தப்பட்டார்களா? என்பது தொடர்பாக விசாரிப்பதோடு, புகார் அளித்த பெண் கடந்த 6 ஆண்டுகளாக சிறுமியாக இருந்த போதிலிருந்தே மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளதால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Comments