நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... வெளிநாடு தப்பியோடும் மகிந்த ராஜபக்சே?

0 4534

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே கொழும்புவில் இருந்து தப்பி குடும்பத்தினருடன் திரிகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் வன்முறை உருவானது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் மகிந்த ராஜபக்சேவின் வீடு, எம்.பி.க்கள், மேயர்கள் உள்ளிட்டோரின் வீடுகளை தீக்கிரையாக்கினர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோரின் வீடுகள், உடமைகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்புவில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரிகோணமலை கடற்படை முகாமிற்கு ஹெலிகாப்டர் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் தப்பியோடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

திரிகோணமலை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தஞ்சமடைந்திருப்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் மகள் யசோதா ஏற்கனவே ஆஸ்திரேலியா தப்பிச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சே திரிகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருக்கும் தகவல் தெரிந்து அங்கு கூடிய மக்கள் முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதோடு, கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதரமான சூழ்நிலையை சமாளிக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நாளைய தினம் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழர்கள் வசிக்கும் யாழ்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே இலங்கையில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments