ஆடிட்டர் வீட்டில் இருந்த ரூ.40 கோடி எங்கே? மண்வெட்டி கொலையாளி திகில் வாக்குமூலம்..!

0 7541
ஆடிட்டர் வீட்டில் இருந்த ரூ.40 கோடி எங்கே? மண்வெட்டி கொலையாளி திகில் வாக்குமூலம்..!

சென்னை மயிலாப்பூரில் ஓட்டுனரால் கொன்று புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதி வீட்டில் இருந்த 40 கோடி ரூபாய் எங்கே? என்று காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மண்வெட்டி கணையை ஆயுதமாக தேர்ந்தெடுத்த கொலையாளியின் வாக்கு மூலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டரும் ஐ.டி. கம்பெனி அதிபருமான ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரை நகை பணத்துக்காக அடித்து கொலை செய்து , பண்ணை வீட்டில் புதைத்ததாக கார் ஓட்டுனர் கிருஷ்ணா அவனது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டான். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 1000 சவரன் நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் இந்த கொலைக்காக திட்டம் தீட்டியது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு, தான் காரை ஓட்டிச்செல்லும் போது , காரில் அமர்ந்திருந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், தனது செல்போனில் யாரிடமோ 40 கோடி ரூபாய் சொத்து விற்பனை தொடர்பாகவும், அந்த பணம் கைக்கு வந்து விட்டதாகவும் பேசிக் கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்த பின்னர் தான் ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளான் ஓட்டுனர் கிருஷ்ணா.

அந்த 40 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்தால் போதும் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம், என்ற கணக்கில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு முன் கூட்டியே கூட்டாளியை வரவழைத்துள்ளான் கிருஷ்ணா. கொலை செய்து விட்டு நேபாளத்துக்கு தப்பிச்சென்று விட்டால் போலீசாரால் பிடிக்க இயலாது என்பதாலும், இருவரது சடலங்களையும் பண்ணை வீட்டிற்குள் புதைத்து வைத்து விட்டால் போலீசாரால் கண்டுபிடிக்க இயலாது என்று திட்டத்துடனும், மூன்று நாட்களுக்கு முன்பே ஆறடியில் குழியை தோண்டியதோடு, உருட்டு கட்டை போல இருக்கும் மண்வெட்டி கனையை இன்னோவா காரின் பின் பகுதியில் வைத்திருந்துள்ளான்.

முன்னதாக பண்ணை வீட்டில் , காவலாளியாக இருந்த தனது தந்தை உள்ளிட்ட குடும் பத்தினரிடம் பொய்யான காரணங்களை கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளான்.

இருவரையும் மண்வெட்டி கணையால் தலையில் தாக்கி கொன்றதாகவும், தங்களை யார் தாக்குகிறார்கள் ? என்பதும் தெரியாமல் இருக்கவும், வெளியில் தப்பிச் செல்லாமல் இருக்கவும் மின் இணைப்பை துண்டித்ததாகவும், வீட்டின் ஜன்னல், கதவுகள் அனைத்தையும் ஏற்கனவே மூடி வைத்திருந்தால், கூச்சல் சத்தம் வெளியில் வராமலும் கொலை செய்ததாக கூறி உள்ளான்.

அனுராதாவிடம் இருந்த அந்த சாவிக் கொத்தை வைத்து அந்த 40 கோடி ரூபாய் எங்கு இருக்கின்றது என்று ஒவ்வொரு லாக்கராக திறந்து பார்த்துள்ளான். அனைத்திலும் நகைகள் தான் இருந்துள்ளது. பணம் கிடைக்காததால் நகைகளையும் வெள்ளி பொருட்களையும் அள்ளி மூட்டையாக கட்டி எடுத்து சென்றதாக கொலைகார ஓட்டுனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளான். வீட்டில் இருக்கும் என்று நினைத்த 40 கோடி ரூபாய் பணம் எங்கே போனது ? என்பது தெரியவில்லை என்று ஓட்டுனர் கிருஷ்ணா கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓட்டுனர் கிருஷ்ணா மற்றும் ரவிராயை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது உண்மையிலேயே 40 கோடி ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலமாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வங்கி கணக்கில் செலுத்தி விட்டாரா ? அல்லது ஓட்டுனர் கிருஷ்ணா கொள்ளையடித்து வழியில் எங்காவது பணத்தை மறைத்து வைத்து விட்டு நாடகமாடுகிறானா? என்ற இரு கோணங்களில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆடிட்டர் ஸ்ரீகாந்தின் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து இங்கு வர உள்ள நிலையில் அவர்களிடமும் 40 கோடி ரூபாய் பணம் பத்திரமாக உள்ளதா? என்று விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments