இலங்கையில் அரசுக்கு எதிராக மெகா போராட்டம்.. ஊரடங்கு நாளை வரை நீட்டிப்பு..!
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கும் இடையே நேற்று கலவரம் மூண்டது.
போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு மகிந்தாவின் ஆதரவாளர்கள் தீ வைத்த நிலையில், பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சிறைக் கைதிகளையும் அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள், ஆளுங் கட்சி எம்.பி.க்கள், மேயர், அரசியல் பிரமூகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், சொகுசு கார்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான குருநாகலில் உள்ள அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகையான அலரி இல்லத்தில் ஆயிரக்கணக்கானோர் நுழைய முயற்சித்ததால் பெரும் பதற்றம் நிலவியது...பாதுகாப்புப் பணியில் ஈடபட்டிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிரட்டினர்..
இரவிலும் போராட்டம் நீடித்த நிலையில், முன்னாள் அமைச்சர் Rohitha வீட்டை அடித்து நொறுக்கி மக்கள் தீவைத்தனர்.
கொழும்பிவில் உள்ள அரசியல் தலைவரின் ஹோட்டலை அடித்து நொறுக்கிய அங்கிருந்த சிலிண்டர் உள்ளிட்டவற்றை தூக்கிச் சென்றனர்.
முன்னாள் அமைச்சர் குமார் வெல்கமா சென்ற காரை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்கும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தப்பிக்க விநோத முயற்சிகளை மாணவர்கள் கையாண்டனர்.
பெருங்கலவரத்தை அடுத்து தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க கொழும்பு ரத்மலான விமான நிலையத்தை மக்கள் சுற்றி வளைத்தனர்.
Comments