வன்முறை, கலவரம், தீவைப்பு கொந்தளிப்பில் இலங்கை...!
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு இடையே மோதல் மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பல ஊர்களில் ஆளும் கட்சியினரின் வீடுகள், அலுவலங்களுக்கு தீ வைத்தனர்.
இலங்கையில் கொழும்பு நகரில் அதிபர் மாளிகைக்கு எதிராக உள்ள காலிமுகத்திடலிலும், பிரதமர் இல்லமான அலரி மாளிகைக்கு எதிரிலும் கடந்த பல நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதற்கான கடிதத்தை அவர், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார்.
மகிந்த பதவி விலகியதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அலரி மாளிகை முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த கூடாரங்களை கிழித்து, தீவைத்து எரித்தனர்.
இதேபோல காலி முகத்திடலிலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மீது பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றன. பல ஊர்களில் இருந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் கொழும்புவுக்கு வந்த பேருந்துகள் அடித்து, நொறுக்கப்பட்டன.
காலிமுகத்திடல் அருகே உள்ள பெகீரா குளத்திற்குள் ஆளும் கட்சியினரை தள்ளி விரட்டி தாக்குதல் நடைபெற்றது. இதனிடையே காலிமுகத்திடலுக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் காரும் தாக்கப்பட்டது.
இதனிடையே, நிட்டம்புவையில் போராட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் காரை வழிமறித்து தாக்கினர். கூட்டத்தினரிடம் இருந்து தப்பிக்க, அமரகீர்த்தி, தமது கைத்துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார் 5 பேர் காயமடைந்ததை கண்டவர்கள் ஒன்று திரண்டு தாக்கத் தொடங்கினார். இதனால் பயந்து போன எம்.பி, அருகில் இருந்த கட்டிடம் ஒன்றில் தஞ்சமடைந்தார். அக்கட்டிடத்தையும் போராட்டக்காரர்கள் சூழந்ததால், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே மொரட்டுவா மற்றும் குருனேகலா,பந்தரவாலா நகர மேயர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் ஜான்சன் பெர்ணான்டோ, ராமேஷ் பத்திரனே, நிமல் லன்சா, எம்.பிக்கள், அருண்டிகா பெர்ணான்டோ,சனத் நிஷ்கந்தா ஆகியோரின் வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இலங்கையில் முன்னாள் அமைச்சர் ஜான்சன் பெர்ணான்டோவின் கட்சி அலுவலகத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.இதனிடையே நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச, அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments