கேரளத்தில் தக்காளிக் காய்ச்சல்... தமிழகத்தில் அச்சம் வேண்டாம்
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் தக்காளிக் காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனத் தமிழக நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் குழந்தைகளுக்குப் புதிய வகைக் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பரிசோதித்ததில், அவர்களுக்குத் தக்காளிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேரள நல்வாழ்வுத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே சேலத்தில் தமிழக நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் இது குறித்துச் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், காய்ச்சல் பாதித்த குழந்தைகளின் உடலில் சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டதாகவும், இது குறித்து அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
Comments