அம்மா தானே எல்லாம்.. இன்று அன்னையர் தினக் கொண்டாட்டம்..!
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நிகரில்லாத தாயின் பெருமையைப் போற்றிடும் நாள் இந்த நாள்!
இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதற்காகவே தாயைப் படைத்தான் என்பது பழமொழி.
விலங்குகள், பறவைகள், பூச்சிகள்... எதுவும் தாயின் அன்புக்கு விதிவிலக்கல்ல. தன் குஞ்சுக்கு தான் தேடிய இரையை ஊட்டி களிக்கும் பறவைக்குக் கூடத் தெரியும் தாய்மை என்பது என்னவென்று!
பத்துமாதம் மடிசுமந்து பெற்ற குழந்தைக்கு உதிரத்தையே பாலாக்கி, இரவென்றும் பகலென்றும் பாராமல் தாலாட்டி, தான் உண்ணாத போதும் குழந்தைக்கு அமுதூட்டும்போது தாய்மை நிறைவு பெறுகிறது.
திரைப்படங்களும், இலக்கியங்களும் தாயின் பெருமைகளை பட்டியலிட்டு சிறப்பித்துள்ளன.
தந்தையின் தாய்மை உணர்வு தாயுமானவன் என்று இலக்கியத்தில் போற்றப்படுகிறது. மனைவியின் மூலமும் ஆண் தாய்மையைப் பெறுகிறான்.
இந்த திருநாளில் தாயைப் போற்றி வணங்குவோம்... மேன்மை பெறுவோம்!
Comments