மலேசியா பெண்ணுக்கு காதல் அல்வா கொடுத்த துபாய் அமாவாசை கைது.. காதல் கசந்ததால் கையில் காப்பு..!

0 13544

மலேசியாவை சேர்ந்த பெண்ணை காதலித்து 6 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு துபாய்க்கு ஓடிச்சென்ற காதலனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரால் துபாயில் இருந்து விரட்டப்பட்டவர், 4 மாத விசாரணைக்கு பின்னர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஒருவருடன், திருநெல்வேலி டவுனை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இம்ரான் என்பவர் முக நூல் மூலம் ஒருவருடமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இம்ரான், சமூக வலைதளம் நட்பை காதலாக்கி செல்போன் மூலம் இருவரும் பேசி காதலை வளர்த்துள்ளனர்.

இம்ரான் தனது பெயரை மாற்றி மதம் மாறியதாக போலியான அவணங்களை காண்பித்து ஏமாற்றி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பரியேறும் பெருமாள் சாஸ்தா கோவிலில் வைத்து அந்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் அந்தப்பெண்ணின் குடும்பத்தினருடன் மலேசியா சென்ற இம்ரான்பணி நிமித்தமாக துபாய் செல்வதாக கூறிவிட்டு காதல் மனைவியிடம் 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கம்பி நீட்டியதாக கூறப்படுகின்றது.

தன்னை ஏமாற்றியது தெரியவந்த நிலையில், இம்ரானை தொடர்பு கொண்டால். மலேசியாவிலிருந்து திருநெல்வேலி வந்து தங்கினால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே கர்ப்பம் அடைந்த அந்த பெண் திருநெல்வேலி வந்து தங்கிய நிலையில் துபாயில் இருந்து வர மறுத்துள்ளார் இம்ரான். இதையடுத்து அந்த பெண் சாமர்த்தியமாக இம்ரான் குறித்து விரிவாக துபாய் போலீசுக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பி உள்ளார். அடுத்த சில நாட்களில் துபாய் போலீசார் இம்ரானை துபாயில் இருந்து இந்தியாவுக்கு விரட்டி உள்ளனர்.

இதையடுத்து இம்ரான் மீது நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து கடந்த 4 மாதங்களாக காத்திருந்த நிலையில் இம்ரானை விசாரணைக்கு அழைத்து வந்த போலீசாரிடம் இருந்து வழக்கறிஞர்கள் உதவியுடன் அவர் தப்பிச்சென்றார். இதையடுத்து மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து முக நூல் காதலில் விழுந்து கர்ப்பிணியாக தவிப்பது குறித்து கண்ணீர் விட்டு கதறினார் அந்த பெண்.

இதையடுத்து ஆதாரங்களில் அடிப்படையில் இம்ரான் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் , காவல்துறைக்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து இம்ரான் மீது பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன் கொடுமை ,பணம் மோசடி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். முக நூல் மூலம் பழகிய மற்றொரு பெண்ணை 2 வது மனைவியாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய இம்ரன் தற்போது நீதிமன்ற உத்தரவால் பாளையாங்கோட்டை மத்திய சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

முக நூலில் நண்பர்களை தேடும் பெண்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments