நன்கொடை கேட்டு பேக்கரியில் அத்துமீறிய சிறுத்தையன்ஸ் கைது... 20 ரூபாய் கொடுத்ததால் அடங்க மறுத்தனர்

0 20227

திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடைவீதியில் கட்சி நிதி குறைவாக கொடுத்ததால் பேக்கரியில் ரகளையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர் 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி நடத்தி வந்தார். இவரது கடைக்கு அரசியல் கட்சியினர் அவ்வப்போது வந்து நன்கொடைக்காக கையேந்துவதும்.. விருப்பப்பட்டால் அவர்களுக்கு இவர் பணம் கொடுப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.

சம்பவத்தன்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நகர செயலாளர் பால்கிட்டு, மஞ்சக்குடி செந்தில் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அந்த கடைக்கு வந்து இனிப்பு வாங்கி கொண்டு, துண்டுப்பிரசுரத்தை வழங்கி கட்சி வளர்ச்சி நிதிக்காக பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அங்கிருந்த கடையின் பணியாளர் முதலாளி வந்தவுடன் வாங்கி கொள்ளவும் என கூறியுள்ளார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மற்றும் கட்சியினர் உடனே பணம் வேண்டும் என வற்புறுத்தி கேட்டதால், கடை பணியாளர் போனால் போகட்டும் என்று 20 ரூபாயை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகின்றது.

தங்களை அந்த கடைபணியாளர் அவமதித்து விட்டதாக கூறி ஆவேசமான சிறுத்தைகள் கடை ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், கடையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

சிறுத்தைகளின் மாமூல் அத்துமீறல் குறித்து தகவல் அறிந்த குடவாசல் பகுதி வணிகர்கள் அனைவரும் , அவர்கள் மீது நடவடிக்கை எக்க கோரி அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இருவரையும் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர்.

இந்த நிலையில் கடை உரிமையாளர் சிசிடிவி ஆதாரத்துடன் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசிக நகர செயலாளர் பால்கிட்டு, மஞ்சக்குடி செந்தில்குமார் ஆகியோரை குடவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு பின்னர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணம் கேட்டு பன் கடையில் பைட் செய்த சிறுத்தைகள், போலீஸ் நடவடிக்கையில் சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments