பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்த பாஜக பிரமுகரை மீட்டு அழைத்துச் சென்ற டெல்லி காவல்துறையினர்

0 2445
பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்த பாஜக பிரமுகரை மீட்டு அழைத்துச் சென்ற டெல்லி காவல்துறையினர்

பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்த பாஜக பிரமுகரை அரியானா காவல்துறையின் உதவியுடன் டெல்லிக் காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர்.

பாஜக இளைஞரணித் தேசியச் செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி ஆம் ஆத்மிக் கட்சி புகார் அளித்திருந்தது.

சமூகங்களிடையே பகையைத் தூண்டும் வகையில் தஜிந்தர் பேசியதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிந்த பஞ்சாப் காவல்துறையினர் இன்று காலை டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து அவரைப் பிடித்துச் சென்றனர்.

15 பேர் வீடு புகுந்து தன் மகனைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும், தலைப்பாகை அணியக் கூட விடவில்லை எனவும் கூறி டெல்லி காவல்நிலையத்தில் தஜிந்தரின் தந்தை புகார் அளித்தார்.

இதனிடையே குருசேத்திரத்தில் தஜிந்தரையும் அவரை அழைத்துச் சென்ற பஞ்சாப் காவல்துறையினரையும் தடுத்து நிறுத்திய அரியானா காவல்துறையினர் டெல்லிக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்துத் தஜிந்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரையும் தங்கள் காவலர்களையும் விடுவிக்கக் கோரி அரியானா காவல்துறைக்குப் பஞ்சாப் காவல்துறை கடிதம் எழுதியது. அதேசமயம் குருசேத்திரத்துக்கு விரைந்து சென்ற டெல்லிக் காவல்துறையினர் தஜிந்தரை மீட்டு டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

ஒருவரைக் கைது செய்தது, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது, மீட்டு அழைத்துச் சென்றது என மூன்று மாநிலக் காவல்துறையினரிடையே நிகழ்ந்த போட்டியான செயல்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments