கிளப் ஹவுஸ்சில் மிங்கில் ஆன 3 சிங்கிள்ஸ்..! ஒரு இளம் பெண் பலி..! அதிவேகத்தால் நிகழ்ந்த விபரீதம்
கிளப் ஹவுஸ் சாட்டிங்கில் அறிமுகமான இரு பெண் தோழிகளை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, அதிவேகமாக சென்னையில் ஊர் சுற்றிய இளைஞரின் இரு சக்கர வாகனம் வேகத்தடையில் மோதி தூக்கி வீசப்பட்டதில் இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞரான பிரவீன் கிளப் ஹவுஸ் செயலியில் மீட் அப் என்ற வயது வந்தோருக்கான சாட்டிங் குழுவில் இயங்கி வந்துள்ளார்.
அப்போது அவருக்கு திருச்சி அடுத்த துவாக்குடிமலையை சேர்ந்த தமிழரசி என்ற 22 வயது பெண்ணும், திருவண்ணாமலை அடுத்த வந்தவாசியை சேர்ந்த ஐஸ்வர்யாவும் அறிமுகமாகி உள்ளனர். 7 மாதங்களாக கிளப் ஹவுஸில் பெண் தோழிகளுடன் சாட்டிங்கில் கும்மாளமிட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் பெண்கள் இருவரும் தங்கள் வீட்டில் வேலைக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு, நண்பர் பிரவீனை சந்திப்பதற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்த இரு பெண்களும் பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புறப்பட்டுள்ளனர். வழியில் இரு சக்கர வாகனம் பழுதானதால் இருவர் நடுவழியில் நிற்க, பிரவீனின் யமஹா ஆர் ஒன் பைவ் மோட்டார் சைக்கிளில் ஐஸ்வர்யாவும், தமிழரசியும் பிரவீனுக்கு பின்னால் ஜோடியாக அமர்ந்து கொள்ள பைக் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் கிளம்பியுள்ளது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அடையாறு பாலத்தை கடந்த போது அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த பிரவீன் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்க மறந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
வந்த வேகத்தில் வேகத்தடையில் பைக் ஏறியதும் அதில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். ஆளில்லாமல் ஓடிய பைக் முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய ரக சரக்கு வாகனத்தில் மோதி விழுந்துள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட தமிழரசிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மயங்கிய நிலையில் கிடந்த பிரவீன் மற்றும் ஐஸ்வர்யாவை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இங்குமட்டுமல்ல நகரில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் வழக்கத்தை விட சற்று பெரிய அளவில் அமைக்கப்பட்டிருப்பதாலும் அந்த வேகத்தடைக்கு முன்பாக எந்த ஒரு எச்சரிக்கை பலகையோ அல்லது வேகத்தடை இருப்பதற்கான பிரதிபலிப்பான்களோ சாலையில் பதிக்கப்படாததே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வாகனங்களை இயக்குவோர் சாலையில் வாகன போக்குவரத்து இல்லை என்பதால் அதிவேகமாக தங்கள் வாகனங்களை இயக்குவதால், வேகத்தடைகளில் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் விபத்தில் சிக்குவதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
Comments