ரெப்போ விகிதம் 0.4 சதவிகிதம் உயர்வு.. ரொக்க இருப்பு விகிதம் 0.5 சதவிகிதம் உயர்வு.. பங்குச்சந்தைகள் வீழ்ச்சி..!

0 7050

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி 4 விழுக்காடும், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடும் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 2020 மே மாதத்துக்குப் பின் மாற்றப்படாமல் இருந்தது. உக்ரைன் போரின் விளைவாகப் பெட்ரோலியம், எரிவாயு, உலோகங்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்ததால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடன் வழங்கலைக் குறைத்துப் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 விழுக்காட்டில் இருந்து 4 புள்ளி 4 விழுக்காடாக உயர்த்துவதாக அறிவித்தார். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாக உள்ளது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் அரை விழுக்காடு அதிகரித்து நாலரை விழுக்காடாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்ததன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சியடைந்தது. இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரத்து 307 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 669 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 391 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 678 ஆக இருந்தது. நிதி நிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்களின் பங்குவிலை 5 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments