ஊர் நாட்டாமையின் உள் குத்து.. சாலைகள் கடந்து வந்த சாயக்கழிவுகள்.. கிராம மக்களிடம் வசமாக சிக்கினர்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து சாயக்கழிவுகளை ஏற்றி வந்து, தூத்துக்குடியிலுள்ள கிராமத்தில் கல்குவாரியில் கொட்ட முயன்ற மூன்று லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஊர் நாட்டாமை கையூட்டு வாங்கிக் கொண்டு, மக்களுக்கு செய்த உபத்திர வேலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
ஜவுளி தொழிலின் முக்கிய அங்கமான துணிகளுக்கு சாயமேற்றும் சாயத் தொழிற்சாலைகள் நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகள் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து தான் வெளியேற்ற வேண்டும் என்பது விதி. ஆனால், விதியை மீறியும், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் சில சாயப்பட்டறை தொழிற்சாலைகள், கழிவுகளை ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றி வருகின்றன. அதுவும் மழைக்காலங்கள் வந்துவிட்டால் சாயப்பட்டறைகளுக்கு ஜாக்பாட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சேமித்து வைத்திருந்த மொத்த சாயக் கழிவுகளையும் மழையோடு, மழையாக நீர்நிலைகளில் கலந்துவிட்டு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இதனால், குறிப்பிட்ட நீர்நிலைகள் மாசடைவதோடு, அதனால் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. சாயக்கழிவுகளிலுள்ள ரசாயனங்கள் மற்றும் உலோகக் கழிவுகளால் தோல் நோய்கள், கருச்சிதைவு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கோடைகாலம் நிலவி வரும் நிலையில், சாயக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய சட்டவிரோத நடவடிக்கைகளை தொழிற்சாலைகள் கையாண்டு வருகின்றன. அந்த வகையில், கல்குவாரிகளில் பள்ளத்தை நிரப்ப கொட்டப்படும் மணலில் சாயக் கழிவுகளையும் கலந்து சேர்ந்து கொட்டிவிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சாயக்கழிவுகள் கலந்த மணலை ஏற்றிக் கொண்டு வந்த மூன்று லாரிகளை சிந்தலக்கட்டை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல்லடத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்த கழிவுகளை சிந்தலக்கட்டை ஊர் நாட்டாமை பெருமாள் மற்றும் கண்ணன் என்பவரின் உதவியுடன் அந்த கிராமத்திலுள்ள கல்குவாரியில் கொட்டுவதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதற்காக, அந்த ஊர் நாட்டாமை ஆயிரக்கணக்கில் கையூட்டாக பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, சாயக்கழிவுகள் கலந்த மணலை ஏற்றி வந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிந்து, 6 பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ஊர் நாட்டாமை பெருமாள், கண்ணன், லாரி உரிமையாளர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த பிரச்சனை குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த போதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ளும் நடவடிக்கை கண்துடைப்பாகவே உள்ளது என்ற பொதுமக்கள் தரப்பில் குற்றசாட்டு முன் வைக்கப்படுகிறது. இதனால், சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது...
Comments