அசுரரை வென்ற இடத்தில் கலெக்சன்.. கமிஷன்.. கரப்ஷன்.. வில்லங்கமான விஐபி தரிசனம்..!
திருச்செந்தூர் கோவிலில் நீதிமன்ற உத்தரவை மீறி கையூட்டாக பணத்தை வாங்கிக் கொண்டு விஐபி தரிசனத்துக்கு செல்வந்தர்களை நேரடியாக அனுமதித்த விவகாரம் தொடர்பாக, கோவில் உள்துறையில் உள்ள பலரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கோவிலின் இணை ஆணையர் எச்சரித்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் விஐபி தரிசனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ள நிலையில், சாமி கும்பிட வரும் பக்தர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து கோவில் நிர்வாகம் ஒருபுறம் சோதிக்க, மற்றொரு புறம் அங்கு காவலுக்கு நிற்கின்ற அறநிலையத்துறை காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு செல்வந்தர்களை நேரடியாக கோவிலுக்கு அழைத்து சென்று வரும் நிகழ்வு தொடர்ந்து வருகின்றது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் ஈடுபடும் கோவிலின் உள்துறை காவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து விழித்துக் கொண்ட கோவிலின் இணை ஆணையர் குமாரதுரை தங்கள் கோவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும், அவர்களின் கரப்சன் , கலெக்சன், கமிஷன் குறித்து எச்சரித்து குரல் பதிவு ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்
குறிப்பிட்ட ஊழியர்களின் பெயரை குறிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடும் ஃபிராடுகள் என்று திட்டியதோடு, இவர்களை எல்லாம் பணி நீக்கம் செய்யவும் , பணியிடை நீக்கம் செய்யவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக வும் இணை ஆணையர் குமாரதுரை எச்சரித்தார்.
அதே நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் 3 வரிசைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் வழியாகவும் பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்க ஏற்பாடு செய்தால் , நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Comments