இந்தியா - டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தங்கள்
இந்தியா - டென்மார்க் பிரதமர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அடுத்து, ஜெர்மனியில் இருந்து டென்மார்க் புறப்பட்ட பிரதமர் மோடியை சந்திக்க பெர்லின் நகரில் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் குவிந்தனர். அங்கு, குழந்தைகளிடம் கொஞ்சி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் பயணமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். அங்கு பிரதமருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேளம் வாசித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
கோபன்ஹேகனில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவருடன் சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில் தலைவர்கள் இருவரும் புல்வெளியில் நடந்து கொண்டே தங்களது கருத்துகளை பரிமாறினர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தலைமையில் பிரதிநிதிகள் அடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. திறன் மேம்பாடு, கால நிலை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியா - டென்மார்க் இடையே இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் வணிகத்துறை, நீர்வளத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, டென்மார்க் நிறுவனங்களுக்கு, இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நட்புறவு, இந்தோ - பசிபிக் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனை அடுத்து பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், இந்தியா - டென்மார்க் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். டென்மார்க் , இந்தியா இடையிலான புதுப்பிக்க வல்ல ஆற்றல் தொடர்பான பசுமை கூட்டணியை உறுதியாக்கும் வகையில் வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் விளைவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments