வேலைக்காக சென்று குவைத் நாட்டில் சிக்கித் தவித்த பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார்
வேலைக்காக சென்று குவைத் நாட்டில் சிக்கித் தவித்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்ட நிலையில், வேலைக்காக வெளிநாடு செல்வோர் முறையாக பணி விசா பெற்றுச் செல்லுமாறு தாம்பரம் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்த பாஷா என்பவரது டிராவல் ஏஜென்சி மூலம் கடந்த மார்ச் மாதம் குவைத் நாட்டுக்கு வேலைக்காக சென்றிருக்கிறார்.
சில நாட்களிலேயே தான் அங்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும், தன்னை மீட்குமாறும் அழுதபடி வாட்ஸ் அப்பில் தனது தாய்க்கு வீடியோ அனுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து மஞ்சுளாவின் தாய், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் ஏஜெண்டுகள் பாஷா, சர்தார் ஆகியோரிடம் விசாரணை செய்த போலீசார், ஐந்தே நாட்களில் மஞ்சுளாவை குவைத் நாட்டில் இருந்து மீட்டனர்.
இது குறித்து பேசிய தாம்பரம் கமிஷனர், வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என ஆசைப்பட்டு பல பெண்கள் வேலைக்கு செல்வதாகவும், அவ்வாறு செல்வோர் முறையாக பணி விசா பெற்று செல்ல வேண்டும் என்றும், சுற்றுலா விசாவை பயன்படுத்தி செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
Comments