கோடை வெப்பம் காரணமாக நாட்டில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்
122 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிகமாக பதிவான வெப்பம் காரணமாக நாட்டில் கோதுமை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக கோதுமை விலை ஏற்றம் கண்ட நிலையில், தானிய உற்பத்தியில் 2ஆவது மிகப்பெரிய நாடான இந்தியா மார்ச் வரையிலான நிதியாண்டில் 7.85 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 275சதவீதம் அதிகமாகும்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கோதுமை உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 111 மில்லியன் டன் கோதுமை சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து வீசிய வெப்பக்காற்று காரணமாக, இந்த உற்பத்தியானது 105 மில்லியன் டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்தியாவில் கோதுமை உற்பத்தி 6சதவீதம் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையில், வெப்பஅலை காரணமாக 20சதவீதம் அளவுக்கு கோதுமை உற்பத்தி குறையக்கூடும் எனவும், இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவும் குறையக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, போர் காரணமாக உக்ரைனில் தானிய உற்பத்தி முடங்கிய நிலையில், இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கோதுமை விலையை உயர்த்தியதால், ஏற்றுமதி குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைகளிலும் கோதுமை விலை 15சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
தற்சமயம், உணவு தேவை குறித்து பெரிய நாடுகள் கவலை கொண்டுள்ள சூழலில், இந்திய விவசாயிகள் உலகுக்கே உணவு அளிக்கும் வகையில் முன்னேறியுள்ளதாக சமீபத்தில் பெர்லினில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments