"30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” - ஜெர்மனி வாழ் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரை
நாட்டில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக பெர்லினில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலில் ஜெர்மனி சென்றார். தலைநகர் பெரிலினில் பிரதமர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இந்தியா - ஜெர்மனி இடையில் பசுமை வளர்ச்சி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய பசுமை வளர்ச்சித் திட்டத்திற்கு 10 பில்லியன் யூரோ நிதி வழங்க ஜெர்மனி முன்வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்திய நிலையில், போரில் யாருக்கும் வெற்றிக் கிட்டப்போவதில்லை என தெரிவித்த பிரதமர் மோடி ஆரம்பக் கட்டத்தில் இருந்து இரு நாடுகளும் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா வலியுறுத்தி வருவதாக கூறினார்.
இதையடுத்து, பெர்லினில் உள்ள Potsdamer Platz சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்தியாவில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், 100-வது சுதந்திர தினத்தின் போது இந்தியா எந்த உச்சத்தில் இருக்கப் போகிறதோ அந்த இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக கூறினார். நாட்டில் மக்களின் வாழ்க்கை, கல்வி தரம் உயர்ந்து வருவதாகவும், பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் 10 ஆயிரம் சேவைகளை, மாநில மற்றும் மத்திய அரசுகள் ஆன்லைன் மூலம் வழங்கி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலகில் ஒட்டுமொத்தமாக நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
Comments