பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு.. ஜெர்மன் பிரதமருடன் மோடி பேச்சு..!

0 2175
பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு.. ஜெர்மன் பிரதமருடன் மோடி பேச்சு..!

ஜெர்மனிக்குச் சென்ற பிரதமர் மோடிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, ராணுவ இசைக்குழுவின் இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜெர்மன் அதிபர் ஒலாப் சோல்சும், பிரதமர் மோடியும் விரிவான பேச்சு நடத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பெர்லினில் உள்ள விடுதியில் ஜெர்மனிவாழ் இந்திய சமூகத்தினர் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறார்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்த ஓவியத்தின் மீது கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

பாட்டுப்பாடிய சிறுவனுக்கு மெட்டுப்போட்டு அவனை ஊக்கப்படுத்தினார். இந்திய சமூகத்தினர் பிரதமருடன் சேர்ந்து செல்போனில் படம்பிடித்துக் கொண்டனர்.

 பெர்லினில் தங்கியிருந்த விடுதியில் இருந்து ஜெர்மனி பிரதமரின் மாளிகைக்குப் பிரதமர் மோடி புறப்பட்டபோது அங்குக் கூடியிருந்த இந்திய சமூகத்தினர் அவரை வரவேற்றனர். தம்மை வரவேற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

 ஜெர்மனி பிரதமர் மாளிகை முற்றத்தில் பிரதமர் மோடிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, ராணுவ இசைக்குழுவினரின் இசை முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

 இருநாட்டு உறவுகளை மேம்படுத்தவும், பல்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஜெர்மனி பிரதமர் ஒலாப் சோல்சும் இந்தியப் பிரதமர் மோடியும் விரிவான பேச்சு நடத்தினர்.

பிரதமர் மோடியின் ஜெர்மனி வருகையையொட்டி பெர்லினில் உள்ள புகழ்பெற்ற பிரான்டன்பர்க் கேட் முன் இந்திய சமூகத்தின் பாரம்பரிய இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்தியப் பிரதமர் மோடியும், ஜெர்மன் பிரதமர் ஒலாப் சோல்சும் அரங்குக்கு வெளியே நடந்துசென்றபடியும் பேச்சைத் தொடர்ந்தனர். இருநாட்டுப் பிரதமர்களுடன் வந்த அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் பல்துறை ஒத்துழைப்புக் குறித்து அரங்கில் பேச்சு நடத்தினர்.

இருநாட்டுக் குழுவினரும் பேச்சு நடத்திய பின் ஒன்றாக நின்று படம்பிடித்துக் கொண்டனர். இந்திய - ஜெர்மன் அரசுகளிடையான ஆறாவது ஆலோசனைக் கூட்டம் இருநாட்டுப் பிரதமர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இருநாட்டுக் குழுவினரும் கலந்துகொண்டு பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாகப் பேச்சு நடத்தினர்.

பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் பிரதமர் ஒலாப் சோல்ஸ் இடையே பசுமை மற்றும் நிலையான ஆற்றல் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை அடுத்து பேசிய பிரதமர் மோடி, பசுமை ஹைட்ரஜன் தொடர்பாக பணிக்குழுவை அமைக்க இந்தியாவும், ஜெர்மனியும் முடிவெடுத்துள்ளதாகவும், இந்தியாவின் பசுமை வளர்ச்சித் திட்டத்திற்கு கூடுதல் மேம்பாட்டு உதவியாக 10 பில்லியன் யூரோக்கள் அளிக்க ஜெர்மனி முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

இதனை அடுத்து பேசிய ஜெர்மனி பிரதமர், பொருளாதார அடிப்படையிலும், பாதுகாப்புக் கொள்கையின் படியும் ஆசியாவில் ஜெர்மனிக்கு இந்தியா ஒரு சிறந்த கூட்டாளி என்றார். இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடரவும் வலுப்படுத்தவும் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்த வேண்டுமென இந்தியா - ஜெர்மனி பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments