பெங்களூரில் வெளுத்து வாங்கிய கனமழை : மரங்கள் வேருடன் சாய்ந்து 10 கார்கள் சேதம்
பெங்களூரில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், மரங்கள் சாய்ந்ததில் பத்துக்கு மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் பெங்களூரில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன. முதலில் ஆலங்கட்டி மழை பெய்தது. முத்துப்போல் பனிக்கட்டிகள் தரையில் விழுந்தன.
தொடர்ந்து மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம் போலப் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வாகனங்கள் அதில் தத்தளித்தபடி சென்றன.
ஒரு சில இடங்களில் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தது. ஐஏஎஸ் குடியிருப்புப் பகுதியில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததில் பத்துக்கு மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. நகரில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Comments