ஜெர்மனி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

0 2091

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மன் பிரதமர் ஒலாப் சோல்சைச் சந்தித்து இருநாட்டு உறவுகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது பற்றிப் பிரதமர் மோடி பேச உள்ளார். இருநாட்டுப் பிரதமர்களின் தலைமையில் இந்திய - ஜெர்மனி அரசுகளிடையான பேச்சுக்களும் நடைபெற உள்ளது.

மே 3, 4 ஆகிய நாட்களில் டென்மார்க்கின் கோபன்கேகனில் அந்நாட்டுப் பிரதமர் மேத் பிரடரிக்சன்னைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். இந்திய - நார்டிக் நாடுகளின் மாநாட்டில் ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

கொரோனா சூழலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத் தக்க எரியாற்றல் உலகின் பாதுகாப்பு நிலவரம் ஆகியன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடு திரும்பும் வழியில் மே 4 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேச உள்ளார்.மூன்று நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தில் 7 நாடுகளைச் சேர்ந்த 8 தலைவர்களுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

உக்ரைன் போர்ச் சூழலில் பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் தமது சுற்றுப் பயணத்தில் 50 தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அந்நாடுகளில் வாழும் இந்தியர்களுடனும் கலந்துரையாடுகிறார். மொத்தம் 25 நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி மே 4 அன்று நாடு திரும்புகிறார்.

பெர்லினில் உள்ள விடுதியில் ஜெர்மனிவாழ் இந்திய சமூகத்தினர் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறார்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்த ஓவியத்தின் மீது கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

பாட்டுப்பாடிய சிறுவனுடன் இணைந்து பாடி அவனை ஊக்கப்படுத்தினார். இந்திய சமூகத்தினர் பிரதமருடன் சேர்ந்து செல்போனில் படம்பிடித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments