கோடை வெப்பம் எதிரொலி - மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

0 1990

நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். 

நாடு முழுவதும் கோடையின் வெப்பம் தகித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் 122 ஆண்டுகளில் காணாத அளவில் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெளியில் தொடங்க உள்ளதால் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெப்ப நிலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், வரவிருக்கும் நாட்களில் வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும் என்பதால் மருத்துவமனைகளில், ஐஸ் பெட்டிகள், தண்ணீர் விநியோகம், உப்பு சர்க்கரை கரைசல் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதை உறுதிபடுத்தவும், தடையில்லா மின்சாரம் விநியோகம், தேவையான இடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பயன்படுத்துவது, குளிர்ச்சியான சூழலை அளிக்கும் வகையில் மருத்துவமனை கூரைகளை மாற்றியமைத்து உள் மற்றும் வெளிப் புறங்களில் நிலவும் வெப்பத்தை குறைப்பது, மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நண்பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, தேவையான அளவில் உணவு, தண்ணீர், உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்வது, வெயில் காலங்களில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது உள்ளிட்ட கோடைக் காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளம்பரம் உள்ளிட்டவை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments