இந்தியாவின் தேடலில் ஐரோப்பிய நாடுகள் மிக முதன்மையான கூட்டாளிகள் - பிரதமர் மோடி
அமைதி, செழிப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் தேடலில் ஐரோப்பிய நாடுகள் மிக முதன்மையான கூட்டாளிகள் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பயணத்தையொட்டிப் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், மே இரண்டாம் நாள் ஜெர்மனியின் பெர்லினில் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - ஜெர்மனி அரசுமுறைப் பேச்சுக்குத் தாம் தலைமையேற்பதாகவும், இதில் இருநாட்டு அமைச்சர்களும் பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மே 3, 4 ஆகிய நாட்களில் டென்மார்க்கின் கோபன்கேகனில் அந்நாட்டுப் பிரதமர் மேத் பிரடரிக்சன்னைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய - நார்டிக் நாடுகளின் மாநாட்டில் ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.
கொரோனா சூழலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத் தக்க எரியாற்றல் உலகின் பாதுகாப்பு நிலவரம் ஆகியன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பும் வழியில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மூன்று நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தில் 7 நாடுகளைச் சேர்ந்த 8 தலைவர்களுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
உக்ரைன் போர்ச் சூழலில் பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதமர் தமது சுற்றுப் பயணத்தில் 50 தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அந்நாடுகளில் வாழும் இந்தியர்களுடனும் கலந்துரையாடுகிறார். மொத்தம் 25 நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி மே 4ஆம் நாள் நாடு திரும்புகிறார்.
Comments