37 வருட மலை ரயிலின் இசைக்குயிலுக்கு ஓய்வு.. குவிந்தது பாராட்டு..!
ஊட்டி மலை ரயிலில் பாடும் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள் ரோஜா மலர் கொடுத்து அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்...
வள்ளி.... கடந்த ஆறு ஆண்டுகளாக ஊட்டி மலை ரயிலில் டி.டி.ஆர் ஆக பணியாற்றிவரும் கானக்குயில் ..!
மேட்டுப்பாளையம் உதகை மலை ரயிலை பொருத்தவரை மேட்டுப்பாளையத்தில் இருந்து 7:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 10 மணி அளவில் குன்னூர் ரயில் நிலையம் சென்றடையும் கல்லார் முதல் ரன்னிமேடு ரயில் நிலையம் வரை மலை ரயில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் பல் சக்கரத்தில் பயணிக்கும், மூன்று மணி நேரம் பயணத்தின்போது சுற்றுலாப்பயணிகளுக்கு பொழுதைப் போக்குவதற்காக மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பரிசோதகராக பணியாற்றி வரக்கூடிய வள்ளி , தனது இனிமையான குரல் மூலம் பழைய மற்றும் புதிய பாடல்களை பாடி சுற்றுலாப்பயணிகளை மகிழ்விப்பதன் மூலம் பிரபலமானவர் டி.டி.ஆர் வள்ளி..!
மலை ரயிலில் பயணிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வள்ளி அவர்களின் பாடல்களை ரசித்து கேட்டு வருவது மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்
கடந்த 1985 ஆம் ஆண்டு தென்னக ரயில்வேயில் பாலக்காடு ரயில் நிலையத்தில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்த திருமதி வள்ளி அவர்கள் தனது கடின உழைப்பாலும் தொடர்ந்து ரயில்வே துறையில் பல்வேறு தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று டிக்கெட் பரிசோதகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் இந்தநிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கக்கூடிய நீலகிரி மவுண்டன் ரயில்வே பிரிவில் பணியில் சேர்ந்த வள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஆக பணியாற்றி வந்தார்.
வழக்கமாக நடைபெறக்கூடிய டிக்கெட் பரிசோதனை பணிகள் முடிந்த பிறகு மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பாடல்களைப் பாடி வந்துள்ளார். டி,டி,ஆர், வள்ளி சனிக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுவதை யொட்டி பிரிவு உபச்சார விழா மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரயில்வே ஊழியர்கள் சுற்றுலா பயணிகள் ஓய்வு பெறும் வள்ளிக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்வில் சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு வள்ளிக்கு ரோஜா மலர் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
வள்ளி போன்ற ஜனரஞ்சக மனிதர்களின் அன்பான உபசரிப்புகள், சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை..!
Comments