கார் பரிசு விழுந்ததாக கூறி 26 தவணைகளாக ரூ.8.84 லட்சம் மோசடி செய்த தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம்
சேலம் மாவட்டம் குப்பனூரில், கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் சுமார் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குப்பனூர் பகுதியை சேர்ந்த ஜெயசித்ராவிற்கு தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் 13ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பரிசாக 16 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்துள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்ததாக கூறப்படும் நிலையில் அதனை பெறுவதற்கு சான்றிதழ்கள் தயாரிக்க 20 ஆயிரம் அனுப்பவேண்டும் என்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த மோசடி தகவலை நம்பிய ஜெயசித்ரா 20 ஆயிரம் ரூபாய் அனுப்பிய நிலையில் அவரிடம் இருந்து 26 தவணைகளாக 8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் வரை தனியார் ஆன்லைன் நிறுவனம் சார்பில் பணம் பறித்துள்ளது. ஆனால் அதன் பின்னும் கார் வழங்கப்படாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயசித்ரா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
எந்தவொரு நிறுவனம் பெரும் மதிப்பில் பரிசு பொருட்களை வழங்குவதில்லை என்றும், எனவே, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments