உக்ரைன் - ரஷ்யா போர்: ஒரு முடிவுக்கு வாங்கப்பா...புதினுக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஜோகோ!
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், இரு நாட்டு அதிபர்களும் வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி 20 அமைப்பில் ரஷ்யாவும் உறுப்பினராக உள்ளது.
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவை ஜி 20 கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உறுப்பு நாடுகள் பலவும் வலியுறுத்தும் நிலையில், சில உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகின்றன.
இந்த சமயத்தில் வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, தன்னுடைய அழைப்பை புதின் ஏற்றுக் கொண்டதாகவும், உக்ரைனும் - ரஷ்யாவும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments