பெண் கல்வியே அரசின் இலக்கு... தடைகளை தகர்த்தெறிய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளும் தகர்த்தெறியப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 114 கோடி ரூபாய் மதிப்பிலான 40 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்ததோடு, 74கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சுமார் 10ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு 71கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் திமுக அரசு செய்துள்ளதாகவும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்ற முதலமைச்சர், பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறியப்படும் என உறுதியளித்தார்.
மேலும், பெரியகுளம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும் எனவும், கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் அதிக நெல் உற்பத்தி செய்யப்படுவதால், அங்கு நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரை 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 64ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
Comments