ஆரோவில்லில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம் - பசுமைத் தீர்ப்பாயம்
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பகுதியில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆரோவில் பன்னாட்டு நகர வளர்ச்சிக் குழுவானது “க்ரவுன் சாலை” எனும் திட்டத்திற்காக அங்குள்ள மரங்களை வெட்ட திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து நவ்ரோஸ் மோடி என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம் என்றும் ஒப்புதல் பெறும் வரை எவ்விதமான பணிகளையும் அங்கு மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுக்குழு ஒன்றை அமைத்துள்ள பசுமைத் தீர்ப்பாயம், மரங்களை வெட்டாமல், நீர்நிலைகளை பாதிக்காமல் சாலை அமைக்க முடியுமா என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
குழு அறிக்கை அளிக்கும் வரை எந்த மரங்களையும் வெட்டக் கூடாது என்றும் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments