ஜெம்ஸ் மிட்டாய் என பட்டன் பேட்டரியை விழுங்கிய சிறுமி...! பொம்மை விளையாட்டிலும் தேவை கவனம்

0 3617
ஜெம்ஸ் மிட்டாய் என பட்டன் பேட்டரியை விழுங்கிய சிறுமி...! பொம்மை விளையாட்டிலும் தேவை கவனம்

சென்னையில் ஜெம்ஸ் மிட்டாய் என நினைத்து பொம்மையில் உள்ள பட்டன் பேட்டரியை விழுங்கிய நான்கரை வயது சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அயனாவரம் வடக்கு மாடவீதி தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கணேஷ்.. இவரது நான்கரை வயது மகள் தனுஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகின்றார். சம்பவத்தன்று இரவு குழந்தை தனுஸ்ரீ வீட்டில் பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார்.. அப்போது பொம்மை ஒன்றில் இருந்து கீழே விழுந்த பட்டன் வடிவிலான பேட்டரியை எடுத்து ஜெம்ஸ் மிட்டாய் என நினைத்து சிறுமி தனுஸ்ரீ எடுத்து விழுங்கியதாக கூறப்படுகிறது.

சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் பேட்டரி தொண்டையில் சிக்கி கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே செய்து பார்த்ததில் பேட்டரி உணவு குடல் பகுதியில் இருப்பதாகவும் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அதனை வெளியே எடுத்து விடலாம் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக குழந்தையின் தாய் தெரிவித்தார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற சிறிய அளவிலான பேட்டரிகள் உள்ள பொம்மை உள்ளிட்ட பொருட்களை விளையாடுவதற்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் போது பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மீதும் ஒரு கண் வைத்திருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தும் குழந்தை நல மருத்துவர்கள் இதே போன்று பேட்டரியை விழுங்கிய மற்றொரு குழந்தையும் தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments