கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டும் வரை, நடவடிக்கை எடுக்காமல் காத்திருக்கும் அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடிக்கக் கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது.
கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டடம், சொகுசு பங்களா, நூற்பாலை ஆகியன கட்டப்பட்டதாகக் கூறித் தொடுத்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது நிலத்தை அளக்கவும், ஆக்கிரமிப்பைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாகவும் அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டும் வரை அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், நடவடிக்கை எடுக்காமல் காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக் கூடாது? என வினவினர்.
ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் தான் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments