சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சைக்கோ மேலாளர்..! வடகறியில் உப்பு அதிகமானதால் ஆவேசம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அசோக் பவன் ஓட்டலில் வடகறிக்கு உப்பு அதிகமானதால் ஆத்திரமடைந்த மேலாளர், சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தெற்குப் புதுத் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன். 56 வயதான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு நுழைவு வாயில் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இதே ஹோட்டலில் திருச்செந்தூர் பி.டி.ஆர் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மேலாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை வெள்ளையன் சமையல் செய்து கொண்டு இருந்த போது அங்கு சென்ற மேலாளர் பாலமுருகன் வடகறியை சாப்பிட்டு விட்டு உப்பு அதிகமாக உள்ளதாக வெள்ளையனிடம் கேட்டுள்ளார். அதற்கு வெள்ளையன் நான் இப்பதான் சுவைத்து பார்த்தேன் உப்பு சரியாகத்தானே உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மேலாளர் பாலமுருகன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை வெள்ளையன் மீது ஊற்றியுள்ளார். இதனால் வலியால் கதறித்துடித்த வெள்ளையனுக்கு முகம், தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் உடல் வெந்து காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த வெள்ளையன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்து வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலாளரை தேடி வருகின்றனர். வடகறியில் உப்பு அதிகமானதால் அதில் கொஞ்சமா தண்ணீரை ஊற்றுவதை விட்டு விட்டு மாஸ்டர் மீது மேலாளர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments