அதிகரிக்கும் கொரோனா… அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலியில் ஆலோசனை!
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த இரண்டு வாரங்களாக நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 483 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 636 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 86 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். பண்டிகைகள் மற்றும் கூட்ட நெரிசலான இடங்களில் இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணியும்படி பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments