தஞ்சை அருகே தேர்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி
தஞ்சை அருகே தேர்த் திருவிழாவின்போது, உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 11பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை அருகே களிமேடு அப்பர் கோயிலில் 94வது ஆண்டு அப்பர் குருபூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இந்த கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாகும்.
நள்ளிரவில் தொடங்கிய தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர். இன்று அதிகாலையில் தஞ்சை-பூதலூர் சாலையில் தேர் வந்த போது, வளைவு ஒன்றில் திரும்புகையில், அங்கிருந்த மின்விளக்கு மீது தேர் உரசியது. அப்போது உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியதால் மரத்தினால் செய்யப்பட்ட அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது.
இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அச்சத்துடன் சிதறி ஓடினர். இந்த விபத்தில் ஜெனரேட்டரை இயக்க வந்திருந்த நபர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். ஊர்வலத்தில் வந்தவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 10பேர் தீயில் எரிந்தும், உடல் கருகியும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்தனர்.
விபத்தில் காயம் அடைந்த 4 பேரைஅங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
Comments