கல்யாணத்துக்குப் பெண் தேடிய கனடா தொழிலதிபர்.. பெண் குரலில் பேசி ரூ.1.38 கோடி மோசடி.!
மறுமணத்துக்காக திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிய கனடா வாழ் தமிழர் ஒருவரிடம் பெண் குரலில் பேசி, 1 கோடியே 38 லட்ச ரூபாயை பறித்த சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். கூகுளில் கிடைத்த பெண் ஒருவரின் படத்தை எடுத்து, தனது தங்கை எனக் கூறி, 2 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பச்சையப்பன். (( GFX IN )) எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கனடா நாட்டில் வசிக்கிறார். இவர், வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பச்சையப்பன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார்.
விவாகரத்தான பெண் அல்லது கணவரை இழந்த பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து பச்சையப்பனை தொடர்பு கொண்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது தங்கை ராஜேஸ்வரி கணவரை இழந்தவர் எனவும், அவருக்கு உங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை காண்பித்ததில் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளுமாறு பச்சையப்பனிடம் பேசியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பச்சையப்பன் கனடாவில் இருந்து கொண்டே செந்தில் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரியிடமும் செல்போனில் பேசி வந்துள்ளார்.
வீடியோ காலில் பேச அழைத்த போதெல்லாம் தனது குடும்பத்தினர் கண்டிப்பானவர்கள் என்பதால் வீடியோ கால் எல்லாம் வேண்டாம் என்று ராஜேஷ்வரி கூறி விடுவார்.
இதற்கிடையே, பச்சையப்பனிடம் பேசிய செந்தில் அவ்வப்போது தனது தங்கையின் தேவைக்கு குடும்பத் தேவைக்கு என பணம் வாங்கி வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்காக லட்சக்கணக்கான மதிப்புடைய பரிசுப் பொருட்களையும், நகைகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.
அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக 3.60 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு கடந்த மாதம் 23-ஆம் தேதி சென்னை வந்த பச்சையப்பன், மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
செந்திலை தொடர்பு கொண்ட பச்சையப்பன், உங்கள் தங்கையை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு வருமாறும், அவருக்கு நிறைய பரிசுப் பொருட்களை வாங்கி வந்திருப்பதாகவும் இருவரையும் நேரில் சந்திக்கவேண்டும் என்றும் என்று பச்சையப்பன் கூறியுள்ளார்.
ஆனால் , செந்தில் மட்டும் பச்சையப்பனை சந்திக்கச் சென்றுள்ளார். தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லை தற்போது சந்திக்க முடியாது என்றும் பச்சையப்பனிடத்தில் கூறியிருக்கிறார். இதனால், தனது தங்கைக்கு வாங்கி வந்த பரிசுப் பொருட்களை தன்னிடம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பச்சையப்பன், ராஜேஸ்வரியை நேரில் சந்தித்துதான் பரிசுப் பொருட்களை கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறி விட்டார். தொடர்ந்து, ஆத்திரமடைந்த செந்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி 3.60 லட்சம் மதிப்புடைய நகைகள், செல்போன் போன்றவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தால், அதிர்ச்சிக்குள்ளான பச்சையப்பன் அப்போது புகார் எதுவும் கொடுக்காமல் கனடா நாட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில் பச்சையப்பன் குடும்பத்தினரும் அவரது மனைவி வித்யா குடும்பத்தினரும் தம்பதிக்கிடையே பேசி சமரசம் செய்துள்ளனர். இதனால், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து விவாகரத்து வழக்கையும் பச்சையப்பன் வாபஸ் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், செந்தில் தனது தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி தன்னிடம் 1.38 கோடி ரூபாய் பணமும் பொருட்களையும் பறித்துக் கொண்டதாகவும் கடந்த மாதம் சென்னை வந்த போது தன்னிடம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டதாக பச்சையப்பன்புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் பெரம்பூரைச் சேர்ந்த செந்திலை கைது செய்தனர். விசாரணையில், செந்திலுக்கு கணவரை இழந்த தங்கையே இல்லை என்கிற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
கூகுளில் தேடி அழகான பெண்ணின் புகைப்படத்தை எடுத்து திருமண தகவல் மையத்தில் போலியான கணக்கை தொடங்கிய செந்தில் ,அதன் மூலம் பச்சையப்பனை தொடர்பு கொண்டு தனக்கு கணவரை இழந்த தங்கை இருப்பதாக கூறியுள்ளார். செல்போன் செயலி மூலம் பெண் குரலில் மாற்றி பேசி பச்சையப்பனிடத்தில் 1.38 கோடி ரூபாய் மோசடி செய்ததை விசாரணையில் செந்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
Comments