கட்டுமானப் பணியின் போது மேம்பாலத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்து விபத்து.. கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்
மதுரை புதுநத்தம் சாலையில் கட்டுமானப் பணியின் போது மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில், சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரித்த நிபுணர் குழு அளித்த அறிக்கையில், ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பயன்படுத்தியது, கர்டர் பொருத்தும் பணியின் போது தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் சம்பவ இடத்தில் இல்லாதது ஆகியவையே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலம் கட்டுமான நிறுவனமான JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கும் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேம்பால கட்டுமான பணிகள் 80% நிறைவடைந்து உள்ளதாகவும், 2022 அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து பாலம் பயன்பாட்டிற்கு வரும் எனதேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments