முன்விரோதத்தால் விவசாயி வெட்டிக் கொலை.. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் கைது
நெல்லையில் முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை குடும்பத்துடன் போலீசார் கைது செய்தனர்.
சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவல்துறை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளரான அழகு பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அழகுபாண்டியனின் நிலத்தில் இருந்த மரக்கன்றுகளை சேதப்படுத்தியது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சசிகுமார் உள்பட 9 பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சசிகுமார் தனது நிலத்தில் விளைந்த காய்கறிகளை விற்க நைனார்குளம் சந்தைக்கு வந்த போது, அங்கு வந்த எஸ்.எஸ்.ஐ அழகுபாண்டியனின் மகன் பாலமுருகன், சசிகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் எஸ்.எஸ்.ஐ அழகு பாண்டியன், அவரது மனைவி ராஜம்மாள், மகன் பாலமுருகன் உட்பட 6 பேரை கைது செய்தனர். இதனிடையே எஸ்.எஸ்.ஐ அழகுபாண்டியனை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Comments