மாமியாரை கொலை செய்து விட்டு மாடியில் இருந்து குதித்த மருமகள்.. பீகார் கொலையாளிகள்.!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தப்ப முன்றதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பத்தேசந்த். 74 வயதான இவர் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி பிரேம்கன்வர்.
இவர்கள் தங்களது 4 மகன்களுடன் திருக்கழுக்குன்றத்தில் வசித்துவரும் நிலையில் பத்தேசந்த் வழக்கம் போல் ஞாயிறன்று மாலை கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் மனைவி பிரேம்கன்வர் கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிச்சியடைந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், கொல்லப்பட்ட பிரேம் கன்வரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்ததில், கொல்லப்பட்ட பிரேம்கனரின் இளைய மருமகள் சுஜாதா மாடியில் இருந்து சில மணி நேரத்துக்கு முன்பு தவறி விழுந்து காலில் எலும்பு முறிவுடன் அவதிக்குள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுஜாதாவை பிடித்து வீட்டில் என்ன நடந்தது என்று விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
திருமணமான சில மாதங்களில் இருந்தே 27 வயதான சுஜாதாவுக்கும் , மாமியார் பிரேம் கன்வருக்கும், அடிக்கடி வாக்குவாதம் உருவாகி உள்ளது. மற்ற இரு மருமகள்களுடன் ஒப்பிட்டு இளைய மருமகளான சுஜாதாவை இழிவாக பேசி வந்ததால் பலமுறை இருவரும் சண்டை போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனது நிம்மதியை கெடுக்கும் மாமியாரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த சுஜாதா, பீகார் மாநிலத்தில் இருந்து தனது மாமாக்கள் சுபிர், தீபக், ஆகிய இருவரை வரவழைத்து இரண்டு நாட்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆள் இல்லாத சமயம் பார்த்து மூவரும் சேர்ந்து பிரேம்கன்வரை கத்தியால் கழுத்தில் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு தப்பி செல்ல முயன்ற போது கால் தவறி மாடியின் மேல் இருந்து கீழே விழுந்த சுஜாதா, கால் உடைந்து ஓட முடியாமல் தவித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வரும் சத்தம் கேட்ட அவர், தனது மாமியாரை யாரோ கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடுகிறார்கள் அவர்களை பிடிக்க முயன்றதாக நாடகமாடி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் சுஜாதாவை கைது செய்த போலீசார், தப்பிச்சென்ற சுஜாதாவின் உறவினர்களான இரண்டு கொலையாளிகளை மூன்று சிறப்புபடையினர் தேடி வருகின்றனர்.
நாளைய மாமியார் தான் இன்றைய மருமகள் என்பதை நமது பெண்கள் உணராத வரை இந்த ஈகோ யுத்தத்திற்கும் இது போன்ற விபரீதங்களுக்கும் முவுவேயில்லை.
Comments