பல்கலை. சட்ட திருத்த முன்வடிவை பொன்முடி தாக்கல் செய்தபோது காரசார விவாதம்.!
பல்கலைக்கழக சட்ட திருத்த முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது காரசார விவாதம் நடைபெற்றது. மசோதாவை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த நிலையில், காங்கிரசின் செல்வப்பெருந்தகை சில கருத்தை தெரிவித்தது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அவர் பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு எதிராக திமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அவைக் குறிப்பில் ஏறாத நிலையில் அதிமுகவினர் வெளியே செல்ல காரணத்தை தேடியதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீசெல்வம், அமைச்சர் ஒருவரே எழுந்து சட்டமன்ற உறுப்பினரை கண்ணியக் குறைவான வார்த்தைகளை பேசுவது பேரவை மரபுக்கு உகந்ததல்ல என்றும் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் குறித்து அப்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடைய பெயரை அவையில் குறிப்பிட்ட பேசியதாக கூறினார்.
தற்போதைய முதலமைச்சரை மட்டுமே பெயர் சொல்லி அழைக்கக்கூடாது, முன்னாள் முதலமைச்சர்களை, மாண்புமிகு என்று குறிப்பிட்டு அவர்களின் பெயரை கூறலாம் என்று அப்போதைய சபாநாயகர் தனபால் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இருக்கிறது என்றும், அதன்படியே செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments