டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.33 இலட்சம் கோடிக்கு வாங்க முன்வந்த எலோன் மஸ்க்.!
டுவிட்டர் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் வாங்கிக் கொள்வதாக எலோன் மஸ்க் அறிவித்ததைப் பங்குதாரர்களின் நெருக்குதலையடுத்து டுவிட்டர் பரிசீலித்து வருகிறது.
டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு 54 டாலர் 20 சென்ட் என்கிற விலையில் நூறு விழுக்காடு பங்குகளையும் 4,340 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கிக் கொள்வதாக ஏப்ரல் 14ஆம் நாள் எலோன் மஸ்க் அறிவித்தார்.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 873 கோடி ரூபாயாகும். சந்தை மதிப்பைவிட 15 விழுக்காடு அதிக விலைக்கு வாங்க எலோன் மஸ்க் முன்வந்தும் அதை ஏற்க டுவிட்டர் இயக்குநரவை மறுத்துவிட்டது.
இந்நிலையில் எலோன் மஸ்க், வெள்ளியன்று டுவிட்டர் பங்குதாரர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். பங்குதாரர்களின் நெருக்குதலால் டுவிட்டர் இயக்குநரவை, எலோன் மஸ்க் இடையே பேச்சு நடைபெற்று வருவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
நிதி திரட்டுவது குறித்து மஸ்க் அறிவித்த பின் டுவிட்டர் பங்குதாரர்கள் பலர் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நல்ல இலாபத்துக்கு விற்கும் ஒரு வாய்ப்பைத் தவறவிடக் கூடாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Comments