அய்யோ பிள்ளைகளுக்கு வலிக்குமே..! அமுத்திட்டு போங்க சாமி...! யானைகளும் குழந்தைகள் தான்..! கோவைக்காரங்க மனசு கடவுளுங்க..!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வழிதவறி விவசாய நிலத்திற்குள் 5 காட்டு யானைகளுடன் நுழைந்த குட்டியானை ஒன்று, தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியை தாண்டி செல்ல முடியாமல் கஷ்டப்பட்டதும், மின்சாரத்தை நிறுத்தி கம்பியை மிதித்து விட்டு போ சாமி என்று தோட்டத்துக்கார பெண்மணி பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துர் அடுத்த குப்பே பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் குட்டியுடன் 5 காட்டு யானைக் கூட்டம் ஒன்று புகுந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதற்காக வனத்துறையினர் விரட்டினர்.
அப்போது வேகமாக சென்ற யானைக்கூட்டம் பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள ஆனந்தன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து கடந்து செல்ல முயன்றது.
விவசாயி ஆனந்தன் தோட்டத்தை சுற்றி காட்டுப்பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்து தோட்டத்தை காப்பதற்கு அமைத்திருந்த மின்வேலியை கடக்க முயன்றது. யானை கூட்டம் மின்வேலியில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக மின்சாரத்தை நிறுத்திய ஆனந்தன் குடும்பத்தினர் வேலியை மிதித்துவிட்டுச் செல்லும்படி யானைகளிடம் தெரிவித்தனர்
குட்டியானை ஒன்று அந்த மின்கம்பியை மிதித்து செல்ல இயலாமல் அந்த பகுதியை கடக்க மிகவும் சிரமப்பட்டது. அதனை கண்டு பரிதாபப்பட்ட தோட்டத்து உரிமையாளர் வீட்டு பெண்ணோ, அய்யோ சாமி வலிக்க போவுது, கம்பியை அமுத்திவிட்டுப்போ என்று பரிதவித்தார்
அதில் ஒரு குட்டியானை மின்வேலியில் இடித்து பின்னே வந்தது. நம்ம வீட்டில் உள்ள மழலை செல்வங்களிடம் அக்கறையுடன் பேசுவது போல அந்தப்பெண்மணி, சாமி, பார்த்து அமித்திட்டுப் போ என்று கூறிய இந்த வீடியோ காட்சிகள் கோவைக்காரங்க பாசக்காரங்க என்று பாராட்டி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.
வனப்பகுதியை அழித்தும், யானைகள் வழித்தடத்தை மறித்தும், ஆசிரமம், ஓட்டல், குடியிருப்பு, தோட்டம் போன்றவற்றை அமைத்திருக்கும், தனிநபர்களால் தான் யானைக்கூட்டம் வழி தவறி ஊருக்குள் புகுந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினாலும், சாமி பார்த்துப்போ என்ற அந்த ஒற்றை வார்த்தை, யானை மீது தங்கள் குழந்தைக்கு நிகராக அன்பு வைத்திருக்கும் கோவை மக்களின் தாயுள்ளத்திற்கு மறுக்க முடியாத சான்று..!
Comments