அரவிந்தரின் 150ஆம் ஆண்டு விழா.. ரூ.193 கோடி மதிப்பில் திட்டங்கள்.. அமித் ஷா தொடக்கி வைத்தார்..!
புதுச்சேரியில் அரவிந்தரின் 150ஆம் ஆண்டு விழாவைத் தொடக்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 193 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.
புதுச்சேரி ஈசுவரன் கோவில் வீதியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்ற அமித்ஷா அங்குப் பாரதியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை ஆகியோரின் சமாதிகளிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமித் ஷா. புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150ஆவது ஆண்டு விழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார் அமித் ஷா.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, அரவிந்தரின் எண்ணங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். அரவிந்தரைப் பற்றி அறியும் ஆர்வத்தை இளையோரிடம் உருவாக்காவிட்டால் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நோக்கம் நிறைவேறாது எனக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அரவிந்தரின் நூல்களைப் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிய பேருந்து நிலையக் கட்டடம் உள்ளிட்டவற்றை தொடக்கி வைத்தார். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மூன்று கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, புதுச்சேரியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர்க் கால்வாய் அமைக்க உள்ளதாகவும், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments