மனத்தின் குரல் பிரதமரின் வானொலி உரை

0 2499
மனத்தின் குரல் பிரதமரின் வானொலி உரை

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நிகழ்வதால் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாறியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். நீர் வளத்தைச் சேமிக்க வலியுறுத்தியுள்ளதுடன், கணித உலகில் பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தது உலகுக்கு இந்தியா அளித்த கொடை எனவும் தெரிவித்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ பணப் பரிமாற்றத்தைச் செயல்படுத்தியதன் மூலம் நாடு டிஜிட்டல் பொருளாதாரமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஒரு நாளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடைபெறுவதையும், மார்ச் மாதத்தில் 10 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு யுபிஐ மூலம் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

 கிடைக்கும் நீர்வளம், தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகியன எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்தையும் வேகத்தையும் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், தண்ணீரைச் சேமிப்பதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

உயிர் வாழ்வதற்கு அடிப்படை நீர் என்றும், அது மிகப்பெரிய வளம் என்பதால், நம் முன்னோர் நீர்ச் சேமிப்புக்கு முதன்மை அளித்ததாகவும் தெரிவித்தார். பழங்காலத்தில் இருந்தே நீரைச் சேமிக்கக் குளங்கள், ஏரிகள் வெட்டுவது ஒருவரின் சமுதாய மற்றும் ஆன்மீகக் கடமையாகப் புராணங்களிலும் வேதங்களிலும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடும் நேரத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பூச்சியத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் உலகில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டிருக்காது என்றும், பூச்சியத்தையும் முடிவிலியையும் இந்தியா கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.

ஒன்றுக்குப் பின் பூச்சியத்தை வரிசையாகப் போடுவதன்மூலம் பத்து நூறு ஆயிரம் எனத் தொகையை வரிசைப்படுத்த முடிவதாகவும், ஒன்றுக்குப் பின் 62 பூச்சியங்கள் போட்டுக் கணக்கிடும் மகோகம் என்கிற எண்ணையும் இந்தியர்கள் அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார். வேதக் கணித முறை இந்தியாவில் உள்ளதால் இந்தியர்களுக்குக் கணிதம் எப்போதும் கடினமான பாடமாக இருந்ததில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments